அரசியல்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: அடையாறு முகத்துவாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாகத் தீவிர ஆய்வு!

top-news

சென்னை:


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடையாறு ஆற்றில் வெள்ள நீர் கடலில் தடையின்றி கலப்பதை உறுதிசெய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (அக்டோபர் 25, 2025) சென்னை, சீனிவாசபுரம் அருகே உள்ள அடையாறு முகத்துவாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

முகத்துவாரத்தை அகலப்படுத்த உத்தரவு:

சமீப நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் மணல் மேடுகள் அடைத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.

நேற்றைய ஆய்வைத் தொடர்ந்து, இன்றும் காலை முகத்துவாரப் பகுதிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்கு தூர்வாரும் மற்றும் அகலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.

அலுவலர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்:

அடையாறு முகத்துவாரப் பகுதியை சுமார் 150 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்ய ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். முகத்துவாரத்தில் உள்ள மணல் குவியல்களை உடனடியாக அகற்றவும், கூடுதல் பொக்லைன் இயந்திரங்களை (JCB) பயன்படுத்திப் பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வடகிழக்கு பருவமழைக் காலம் முழுவதும் அடையாறு முகத்துவாரப் பகுதியைத் தொடர்ந்து கண்காணிக்க, மாநகராட்சி வட்டார துணை ஆணையர் தலைமையில் நீர்வளத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் கண்காணிப்புக் குழுவை அமைக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். நகரில் மழை நீர் தேங்குவதைத் தடுக்க, நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகளை முதலமைச்சர் தீவிரமாகக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.