கோவை: அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (அக்டோபர் 23, வியாழக்கிழமை) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கட்சியை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் தான் விதித்ததாகக் கூறப்படும் "10 நாட்கள் கெடு" குறித்து விளக்கம் அளித்தார்.
விளக்கம் அளித்த செங்கோட்டையன்:
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த செங்கோட்டையன், “அதிமுகவில் விரைவில் ஒரு நல்லது நடக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், சில வாரங்களுக்கு முன் அவர் வெளியிட்ட கருத்து குறித்து விளக்கம் அளிக்கும்போது,
“நான் யாருக்கும் 10 நாட்கள் கெடு என்று கொடுக்கவில்லை. ஊடகங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டன.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை விரைவில், அதாவது 10 நாட்களுக்குள் துவங்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன்.
அந்தப் பேச்சுவார்த்தை நடந்து, அனைவரும் இணைவதற்கான செயல்பாடுகள் முடிவடைய ஒரு மாதம், ஒன்றரை மாதம் கூட எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் நான் சொல்லியிருந்தேன்” என்று அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக அவர் கட்சி தலைமைக்கு "10 நாட்கள் கெடு" விதித்துள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியான நிலையில், இன்று அவர் இந்தப் புதிய விளக்கத்தை அளித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, அதிமுக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.


