சென்னை: திருவண்ணாமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.36 கோடி மதிப்பீட்டில் 19 மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையின் வினாக்கள்-விடைகள் நேரத்தில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். அவர், "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கோயிலுக்கு வரும் அந்தப் பக்தர்களுக்காகச் சிறப்பு வசதிகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.36 கோடி மதிப்பீட்டில் 19 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஒரு பெருந்திட்ட வரைவு (Master Plan) தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை வசதிகள், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.


