சென்னை: புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னரும், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்திக் தொண்டைமான் இன்று அதிமுகவை விட்டு திமுகவில் இணைந்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தபோது, தமிழக அமைச்சர் ரகுபதி உடனிருந்தார்.
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் தொண்டைமான், “அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் பாதை சரியில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்கக் கூடாது என்பதற்காகவே நான் திமுகவில் இணைகிறேன். முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழகம் முன்னேறி வருகிறது. அதற்கு நான் உறுதுணையாக இருந்து பணியாற்றுவேன்” என்று கூறினார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் 2012ஆம் ஆண்டு புதுக்கோட்டை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் கார்த்திக் தொண்டைமானுக்கும் இடையே தொடக்கம் முதலே மோதல் நிலவி வந்தது. இந்த அரசியல் மோதலின் பின்னணியிலும் அவர் இப்போது அதிமுகவை விட்டு திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் தொண்டைமானின் தந்தை விஜயரகுநாத தொண்டைமான், காங்கிரஸ் கட்சி சார்பில் 1967, 1977 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் மூன்று முறை புதுக்கோட்டை தொகுதியில் எம்எல்ஏவாக பணியாற்றியவர். கார்த்திக் தொண்டைமான் தனது அரசியல் பயணத்தை காங்கிரஸ் கட்சியில் தொடங்கி பின்னர் திமுகவில் இணைந்தார்.
2005ஆம் ஆண்டு அவர் அதிமுகவில் இணைந்து, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் தர்மயுத்தம் தொடங்கியபோது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டார். அதன்பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தொடர்ந்து இருந்தார். புதுக்கோட்டை தொகுதியில் 2016 மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக வெற்றிபெற்றது. இந்நிலையில் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்திருப்பது, அந்தக் கட்சிக்கு புதுக்கோட்டையில் கூடுதல் பலம் சேர்க்கும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.


