கோவை:
கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ. நீள மேம்பாலத்திற்கு 'ஜி.டி. நாயுடு' பெயர் சூட்டப்பட்டதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பெயர் சூட்டுதலை பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முழுமையாக ஆதரித்துள்ளார்.
அண்ணாமலையின் கருத்து:
சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜி.டி. நாயுடுவின் பெயர் பாலத்திற்குச் சூட்டப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் கூறியதாவது:
"ஜி.டி. நாயுடுவின் பெயரை கோவை மேம்பாலத்திற்கு வைத்தது முற்றிலும் சரியான முடிவு. ஜி.டி. நாயுடு அவர்கள் ஜாதியை எல்லாம் தாண்டி ஒரு பொதுத் தலைவர். கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
கோவையில் அந்தப் பாலத்திற்கு ஒருவரின் பெயர் வைக்க வேண்டும் என்றால், அதற்குச் சரியான பெயர் ஜி.டி. நாயுடுதான். அவரது பெயரை வைத்ததற்காக நாங்கள் மனதார வரவேற்கிறோம். நாங்கள் அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடைக்கவில்லை."
அரசு ஒருபுறம் சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுவிட்டு, மறுபுறம் இந்தப் பெயரைச் சூட்டியது முரண்பாடாகக் கருதப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ஜி.டி. நாயுடுவின் பங்களிப்பு மற்றும் பொதுவான அடையாளம் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தப் பாலத்தைத் திறந்துவைத்தபோது, ஜி.டி. நாயுடு 'இந்தியாவின் எடிசன்' என்றும், தந்தை பெரியாரின் கொள்கைத் தோழர் என்றும் குறிப்பிட்டு, அவரை கெளரவப்படுத்தும் வகையிலேயே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இது 'சாதிப் பெயர்' என்று கூறி நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


