சென்னை:
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி கடந்த 7ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவையொட்டி, சென்னைக்கு வருகை தந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரேமலதா மற்றும் அவரது சகோதரர் சுதீஷ் ஆகியோரைச் சந்தித்துத் துக்கம் விசாரித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், சமீபத்தில் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (டிவி.கே.) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து மற்றும் அதனையொட்டி எழுந்த சர்ச்சைகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அண்ணாமலை அளித்த பதில்:
இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, "கரூரில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயரச் சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காகக் கரூருக்கு வருவது குறித்த அச்ச உணர்வு தேவையில்லை. அவர் கரூருக்கு வரவேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக வரலாம்.
கரூருக்குப் போவதே அச்சுறுத்தல் என்று எண்ணத்தை யாரும் உருவாக்க வேண்டாம். தமிழக வெற்றிக் கழகத்தின் (டி.வி.கே.) தலைவர் என்ற முறையில், அவர் தனது கட்சி சார்ந்த மக்களைச் சந்திக்க வரலாம். இதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
மேலும், கரூர் விபத்து தொடர்பாகக் கரூரில் நிலவும் அரசியல் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், அனைவரும் பொதுவான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


