அரசியல்

ஜி.டி. நாயுடு பெயர் சர்ச்சை: சாதிப் பெயர் இல்லை, கெளரவப் பெயரே! - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்!

top-news

கோவை: தமிழகத்தில் குடியிருப்புகள் மற்றும் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், கோவையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட உயர்மட்ட பாலத்திற்கு ‘ஜி.டி. நாயுடு’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று பதிலளித்துள்ளார்.


சர்ச்சையின் பின்னணி:

ரூ. 1,791 கோடி செலவில் 10.10 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்டுள்ள கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முன்னதாக, இந்தப் பாலத்திற்கு 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்படும் பிரபல விஞ்ஞானி மற்றும் தொழிலதிபர் ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

ஆனால், அரசு ஒருபுறம் சாதிப் பெயர்களை பொது இடங்களிலிருந்து நீக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ள நிலையில், 'நாயுடு' என்ற சாதிப்பெயரைக் குறிக்கும் பெயரைப் பாலத்திற்குச் சூட்டுவது முரண்பாடானது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல தரப்பினரும் விமர்சித்து வந்தனர்.

அமைச்சர் எ.வ. வேலுவின் விளக்கம்:

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, "தமிழ்நாடு முதலமைச்சர் எப்போதும் நன்றி உள்ளம் கொண்டவர். நாட்டிற்கு உழைத்தவர்களை இதுபோலப் பெயர் சூட்டி கெளரவிப்பார். இந்தப் பாலத்தை முழுமையாக நிதி ஒதுக்கி, விரைவாகச் செயல்படுத்தியது திராவிட மாடல் அரசுதான்," என்று குறிப்பிட்டார்.

ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "அவரை (ஜி.டி. நாயுடு) அப்படி அழைப்பதுதான் வழக்கம். அந்தப் பெயரைத்தான் நாங்கள் வைத்திருக்கிறோம். அவர் பெரியாரின் கொள்கைத் தோழர். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். கோவை என்றாலே புதுமை என்பதற்கு ஏற்ப, அந்தப் பெருமைக்குரியவரின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. இது சாதிப் பெயரைக் குறிக்க அல்ல, அவரை கெளரவப்படுத்தும் வகையிலேயே சூட்டப்பட்டுள்ளது," என்று விளக்கம் அளித்தார்.

மேலும், இந்தப் பாலம் குறித்து விமர்சிப்பவர்கள், இலக்கணம் மற்றும் தமிழ் பேசுவதையெல்லாம் எங்களுக்குக் கற்றுத் தர வேண்டாம் என்றும் அவர் காட்டமாகக் கூறினார். எனினும், விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துள்ளதால், அரசு இந்த பெயர் மாற்றம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.