அரசியல்

"விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை" - உயர்நீதிமன்றக் கருத்தை நீக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு!

top-news

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், அவர் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கடுமையான விமர்சனங்களை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

உயர்நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனம்:

விசாரணையின்போது, "நெரிசல் ஏற்பட்டவுடன் தலைவர் (விஜய்) அந்த இடத்திலிருந்து காணாமல் போய்விட்டார். இத்தகைய தலைமைப் பண்பு தரமற்றது. உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்து கட்சி எந்தவித வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. இது அவரது மனநிலையைக் காட்டுகிறது" என்று நீதிபதி செந்தில்குமார் மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். மேலும், இந்தச் சம்பவம் 'மாபெரும் மனித தவறால் ஏற்பட்ட பேரழிவு' என்றும் அவர் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் மனு:

நீதிபதி செந்தில்குமார் தெரிவித்த இந்தக் கருத்துக்கள் தவெக தலைவரின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும், வழக்கை விசாரிக்கும்போது நீதிபதி ஒருவரின் தனிப்பட்ட கருத்தாக இதைப் பதிவு செய்யக்கூடாது என்றும் கூறி, இந்தக் கருத்துக்களை நீதிமன்ற ஆவணங்களில் இருந்து நீக்க வலியுறுத்தி தற்போது உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.