பிகார்: பிகாரில் 18-வது சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எழுந்துள்ள ஊகங்களுக்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் நிதீஷ் குமார் தான் இருப்பார். இதில் எந்தவித குழப்பமும் இல்லை" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு விரைவில் எட்டப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
இதன் மூலம், பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள் நிதீஷ் குமாரின் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.


