கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, நெரிசலில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி:
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, முன்னர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம், "வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது" எனக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவன் தரணிகாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஐ.ஜி. ஆஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


