விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியின் நடைபயணத்தை மக்கள் மற்றும் கட்சியினர் ஏற்க மாட்டார்கள் என்று கடுமையாக தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாமகவின் வேர் தைலாபுரத்தில்தான் உள்ளது. கட்சிக்கு நிறுவனர் மற்றும் தலைவர் இரண்டுமே நான்தான். பாமக தலைவராக வேறு யாரையும், குறிப்பாக அன்புமணியைச் சுட்டிக்காட்டக் கூடாது” என்றார்.
அவர் மேலும், “தலைமைக்கும் தலைவருக்கும் கட்டுப்படாமல் யாத்திரை மேற்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. தொண்டர்களும் மக்களும் அன்புமணியின் நடைபயணத்தை ஏற்க மாட்டார்கள். இதுகுறித்து காவல் துறையினருக்கும் உள்துறை அமைச்சருக்கும் முறையான புகார் கொடுத்துள்ளோம். எனது கட்டளையை மீறி நடைபயணம் மேற்கொள்ளும் அன்புமணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து ராமதாஸ் கூறுகையில், “எனது வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அளவில் திறமையான தமிழக சைபர் க்ரைம் போலீஸார் இதை விசாரித்தால், இரண்டு நாட்களில் கருவியை வைத்தவரை கண்டுபிடித்து விட முடியும். ஆனால் இதுவரை சைபர் க்ரைம் பிரிவும் காவல் துறையும் எந்த பதிலும் அளிக்கவில்லை,” என்றார்.
மேலும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருவது குறித்து அவர் கருத்து தெரிவித்து, “ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


