அரசியல்

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்

top-news

**சென்னை:** தமிழ்நாட்டு அரசியல் சூழலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷும் உடன் இருந்தனர்.

சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதனால் நாங்கள் நட்பின் அடிப்படையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் ‘நன்றாக இருக்கிறேன்’ என்று கூறினார். விரைவில் முழுமையாக குணமடைய வேண்டுமென வாழ்த்தியும் வந்தோம்,” என்று தெரிவித்தார்.

மேலும், தனது குடும்பம் மற்றும் திமுகவுடனான உறவை பற்றி பிரேமலதா விளக்கினார். “என் திருமணம் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. விஜயகாந்துக்கும் கருணாநிதிக்கும் 45 ஆண்டுகள் நீண்ட நட்பு இருந்தது. அதேபோல, முதல்வர் ஸ்டாலினும், விஜயகாந்துடனும் நல்ல நட்புறவில் இருந்தார். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது ஸ்டாலின் நலம் விசாரித்தார். இப்போது அவர் சுகயீனமாக உள்ளதால் நாங்களும் மரியாதையுடன் சந்தித்து நலம் கேட்டோம்,” என்றார்.

இந்தச் சந்திப்பு அரசியல் நோக்கத்திற்காக அல்ல என்றும், இது முழுக்க மரியாதை மற்றும் நட்பின் அடிப்படையிலான ஒன்று மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தினார். “இது 100 சதவீதம் மரியாதை சந்திப்பு தான். எங்கள் குடும்பம் மற்றும் திமுக குடும்பம் இடையே இருக்கும் நெருக்கத்தின் வெளிப்பாடுதான் இது,” என்று அவர் குறிப்பிட்டார். தேமுதிக வளர்ச்சி குறித்து பேசும் போது பிரேமலதா, “தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். தற்போதைக்கு நாங்கள் கட்சியின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். கூட்டணி பற்றி இப்போது எதையும் கூற முடியாது. அதற்கான நேரம் வந்தபோது அறிவிப்போம்,” என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பு மரியாதை அடிப்படையிலானதா அல்லது எதிர்கால கூட்டணிக்கான முன்னோட்டமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் நிலவுகின்ற நிலையில், பிரேமலதாவின் விளக்கம் தெளிவை ஏற்படுத்தியுள்ளது.