அரசியல்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம்

top-news

சென்னை: ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பிரிந்து தனித்து செயல்படும் ஓ. பன்னீர்செல்வமும் இன்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை நடைபயிற்சியின்போது முதலமைச்சரை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அவரிடம் நலம் விசாரித்ததோடு, சில நேரம் இருவரும் தனிப்பட்ட முறையில் உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நாளில், முதலமைச்சரை அவர் இரண்டாவது முறையாக சந்தித்திருப்பது கூடுதல் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாஜக கூட்டணியிலிருந்து பன்னீர்செல்வம் அணியினர் விலகியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க மறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்த நிலையில், திமுக தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நட்பு வட்டாரத்தை வலுப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இச் சந்திப்பில் முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணன் உட்பட ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சரும், அவரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் மகன், எம்.பி. ஓபி ரவீந்திரநாத் ஆகியோரும் இருந்தனர்.

காலை வேளையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்திருந்தனர். அதற்கு பின் சில மணி நேரங்களுக்குள் ஓபிஎஸ் சென்றுள்ளதால் அரசியல் அரங்கில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. மாற்று அணியில் இருப்பவர்கள் திமுக தலைவரை தொடர்ந்து சந்திக்கும் நிகழ்வுகள், வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் முன்னோட்டமாகக் கருதப்படுகின்றன.