'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குக் காங்கிரஸ் சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற செல்வப்பெருந்தகை, அங்கு சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், இந்தத் துயரச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும், தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.
விஜயின் பரப்புரைத் திட்டம்:
தவெக தலைவர் விஜய், தனது முதல் அரசியல் சுற்றுப் பயணத்தை ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ எனும் பெயரில் மேற்கொண்டுவருகிறார். இந்தப் பரப்புரைகள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின்போதுதான், கரூரில் நடந்த கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பிலும் தற்போது நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சமும், தவெக தலைவர் விஜய் சார்பில் தலா ரூ. 20 லட்சமும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


