அரசியல்

“இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கிறது...” த.வெ.க தலைவர் விஜய்!

top-news

கரூரில் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது. எனினும், உங்களின் ஒருவனாகிய நான், இந்தத் துயரச் சூழலில் குடும்ப உறுப்பினராக என் கடமையைச் செய்யவேண்டியது அவசியம்.


அதன்படி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களுடன், தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிகிச்சை பெற்று வரும் நம் உறவுகள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன். சிகிச்சை பெறும் நமது உறவுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக் கழகம் உறுதுணையாக இருந்து செய்யும் என்றும் உறுதியளிக்கிறேன்."

இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.