சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு கடந்த நவம்பர் 19-ம் தேதி உயிரிழந்தார். இதனால் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
மீண்டும் போட்டியிட ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் வலியுறுத்தலா?
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பமாக இருந்து வருகிறது.
இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் விருப்பம் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஆலோசனை!
இந்தச் சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொன்முடி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடவடிக்கைகள், தொகுதி வாரியான அரசியல் நிலவரம், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், தொகுதியின் தற்போதைய கள நிலவரத்தை ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை: துரைமுருகன் விளக்கம்!
இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்கள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், இடைத்தேர்தல் தொடர்பாக எந்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவில்லை என்றும், அனைவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்று விளக்கம் அளித்தார்.
இதனால் அண்ணா அறிவாலயத்தில் உண்மையில் நடைபெற்ற ஆலோசனையின் நோக்கம் குறித்த விவாதம் மேலும் அதிகரித்துள்ளது.
ஸ்டாலினின் முடிவு என்னவாக இருக்கும்?
தமிழகத்தில் ஏற்கெனவே சில சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியும் தற்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இதனால் மொத்தம் ஆறு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாரா அல்லது வேறு வேட்பாளரை திமுக களமிறக்குமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதி நிலவரம் மற்றும் கட்சியின் அரசியல் வியூகத்தின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொளத்தூர் இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



