அரசியல்

தவெக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் இன்று முக்கிய அறிவுறுத்தல்! கட்சி நிர்வாகிகள் மீது எழும் புகார்களால் அதிரடி ஆலோசனை

top-news

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு விவகாரம் மற்றும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சர்ச்சைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வரும் தவெக தலைவருமான விஜய் இன்று (நவம்பர் 11) கட்சி எம்எல்ஏக்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.


பனையூரில் இன்று ஆலோசனைக் கூட்டம்

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக சில தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


சர்ச்சையில் சிக்கிய எம்எல்ஏக்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி எம்எல்ஏவும் சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான ரவிசங்கர் தொடர்பாக வெளியான வீடியோ ஒன்று அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. குடிநீர் விநியோகம் மற்றும் உள்ளாட்சிப் பிரச்சினைகள் குறித்து முறையிடச் சென்ற கார்த்திக் குமார் என்பவரை அவர் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் வெளியான விளக்க வீடியோ தொடர்பாகவும் அந்த நபர் மிரட்டப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

அதேபோல், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியருக்கு ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், அவருக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரங்களும் கட்சித் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.


காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

இதற்கிடையில், மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலாளர் சாய் குமார், உள்துறைச் செயலாளர் கார்த்திக், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எம்எல்ஏக்களுக்கு கடும் எச்சரிக்கை?

இன்றைய கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம், தொகுதி மக்களின் குறைகளை அணுகும் முறை, கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதல்வர் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சர்ச்சைகளில் சிக்கியுள்ள எம்எல்ஏக்கள் தொடர்பாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆளும் கட்சியினர் மீதான புகார்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அதிகரித்து வரும் சூழலில், முதல்வர் விஜய் நடத்தும் இந்தக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.