அரசியல்

“தமிழக வெற்றிக் கழகமா? Drugs வெற்றிக் கழகமா?” போதைப்பொருள் விவகாரத்தில் தவெகவுக்கு பரந்தாமன் சரமாரி கேள்வி!

top-news

சென்னை: நாகப்பட்டினத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பரந்தாமன், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரூ.100 கோடிக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் தவெக நிர்வாகியாக இருந்த பூபாலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பிய பரந்தாமன்!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பரந்தாமன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தவெக நிர்வாகிகள் சிக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், “இது தமிழக வெற்றிக் கழகமா? Drugs வெற்றிக் கழகமா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தவெக எடுத்த நடவடிக்கை என்ன?

இதற்கிடையே, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளதாக தவெக தலைமை அறிவித்துள்ளது.

பரந்தாமன் முன்வைத்துள்ள பிற குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட வேண்டியவை. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.