திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் சுற்றுப்பயணத்தை நாளை (செப்டம்பர் 13) திருச்சியில் தொடங்குகிறார். முதற்கட்டமாக, செப்டம்பர் 13 முதல் 20 வரை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.
இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை செல்கிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அரை மணிநேரம் உரையாற்றுகிறார்.
முன்னதாக பிரசார வாகனம் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனம் திருச்சிக்குப் புறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முனீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.


