விழுப்புரம்: பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான கருத்து மோதல் நீடித்து வந்த இந்நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அதற்கு அவர் 31-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்று வரையிலும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்றுடன் கெடு முடிவுற்றது
இதனைத் தொடர்ந்து, ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. இருப்பினும் 16 குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூறாததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என்று உறுதி செய்யப்படுகிறது. அன்புமணியின் செயல்கள் தலைமைக்கு கட்டுப்படாத வகையில் அரசியல்வாதி என்ற தகுதி அற்றவராக செயல்பட்டு வருகிறார்.
பா.ம.க. செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி விதிகளின்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்தும் அவர் பயன்படுத்தி கொள்ள தவறியதால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூத்தோர் சொல் எதையுமே அவர் கேட்கவில்லை. பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறியும் ஏற்கும் நிலையில் அன்புமணி இல்லை. மிகவும் போராடி பா.ம.க.வை வளர்த்தேன். கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அன்புமணிக்கு இல்லை. வேண்டுமானால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும் என்று ராமதாஸ் பேசினார்.


