அரசியல்

கோவையில் அக்.15-ல் ‘அப்துல் கலாம் அரசியல் பயிற்சி மையம்’: அண்ணாமலை அறிவிப்பு

top-news

கோவை: ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில், அரசியலில் களமிறங்க விரும்புவோருக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வழங்கும் வகையில் ‘அப்துல் கலாம் நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கான மையம்’ கோவையில் தொடங்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி இந்த மையம் தொடங்கப்படும் என ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் களமிறங்க விரும்புவோருக்கு அரசியல் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவது இந்த மையத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் 100 பெண்கள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் இணைய உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் ‘வீ த லீடர்ஸ்’ முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மையத்தின் மூலம் எதிர்காலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அரசியல் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு எதிர்கால தேர்தல்களில் பங்கேற்பதற்கான அடித்தளப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் தொடங்கப்பட உள்ள இந்தப் பயிற்சி மையம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.