அரசியல்

மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணைக்கு செப்.25 வரை இடைக்காலத் தடை நீட்டிப்பு!

top-news

புதுச்சேரி: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை, செப்டம்பர் 25ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி மாவட்ட தலைமை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கை விசாரித்து வந்த குற்றவியல் நடுவர் சேரலாதன் மாஹேவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது குற்றவியல் நடுவர் சந்திரசேகர் பொறுப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய நடுவர் வழக்கை விசாரிப்பதற்கு தடை விதிக்கக் கோரி மரிய வில்சன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த புதுச்சேரி மாவட்ட தலைமை அமர்வு நீதிபதி டி.வி. ஆனந்த், வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை செப்டம்பர் 25ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த அடுத்தகட்ட விசாரணையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வழக்கை ரத்து செய்யக் கோரி மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தொடரப்பட்டிருந்தது. குடும்பத்தினருக்கு இடையேயான பிரச்சினையை சமரச தீர்வு மையம் மூலம் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் உடனடி சமரசம் ஏற்படவில்லை என்றும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.