அரசியல்

எடப்பாடி பழனிசாமி ஏமாற்றி விட்டார்: பிரேமலதா குற்றச்சாட்டு

top-news

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது ஏற்பட்ட ஏமாற்றங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் கூட்டணி ஒப்பந்தங்களில் தேதி குறிப்பிடப்படாததாலேயே தாங்கள் ஏமாந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

தி.நகரில் நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தங்கள் கட்சி சார்பில் 80% பூத் கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 20% பணிகள் செப்டம்பர் 14-க்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஆனால், அவரது முந்தைய வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் எத்தனை தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வந்தன, எத்தனை இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது என்பது ஒரு மில்லியம் டாலர் கேள்வி. எதிர்க்கட்சிகள் ஏன் வெள்ளை அறிக்கை கேட்கின்றன என்பது இதனால்தான்,” என்று கூறினார்.

கூட்டணி, தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் ஜனவரி 9 அன்று கடலூரில் நடைபெறவுள்ள மாநாட்டுக்குப் பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் மாநிலங்களவை சீட் தருவதாக வாக்குறுதி அளித்து, பின்னர் நிறைவேற்றாமல் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்,” என்று குற்றம்சாட்டினார்.

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் கூட்டணி ஒப்பந்தங்களில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடும் வழக்கம் இல்லை. அதேபோலத்தான் தேமுதிக உடனான ஒப்பந்தத்திலும் தேதி குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார். இதுவே நாங்கள் ஏமாந்ததற்குக் காரணம்,” என்று பிரேமலதா வேதனையுடன் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்களுக்குப் பணம் கொடுத்து மக்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.