சென்னை: “தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை அதிமுக தொண்டர்களுக்கும் எனக்கும் தூக்கமில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் எனது எழுச்சிப் பயணத்தை கடந்த ஜூலை 7ஆம் தேதி தொடங்கி, இதுவரை 118 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களைச் சந்தித்துள்ளேன். சுமார் 6,728 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளேன். இதுவரை சுமார் 60 லட்சம் மக்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு, அவர்கள் மனக்குமுறல்களையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
பழனிசாமி மேலும் கூறியதாவது:
“எனது எழுச்சிப் பயணத்தின் போது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலாளர்கள், ஏலகிரி மலைவாழ் பழங்குடியினர் என அனைத்து தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருவரும் என்னை சந்திக்கும் போது, அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களையும், நல்லாட்சியையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர். அதேசமயம், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியையும் பகிர்ந்தனர்” என அவர் குறிப்பிட்டார்.
“அதிமுக ஆட்சியில் மீண்டும் வந்தவுடன், தாலிக்குத் தங்கத்துடன் பட்டு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். தீபாவளிக்காக மகளிருக்கு சேலை வழங்கப்படும். வீடு இல்லாத ஏழை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிலம் வழங்கி, தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இத்தகைய நலத்திட்டங்களை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றியுள்ளனர். அதன் விளைவாக, மக்கள் இன்று கண்ணீருடனும் வலியுடனும் வாழ்கின்றனர்” என்று பழனிசாமி குற்றம் சாட்டினார்.
மேலும், “`நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை; உங்களையும் ஓய்வெடுக்க விடப்போவதில்லை’ என போலி நம்பிக்கையில் இருப்பவர் ஸ்டாலின் தான். ஆனால் 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நிரந்தர ஓய்வு பெறப்போகிறார். அப்போது தமிழகத்தை பீடித்திருக்கும் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். குடும்ப ஆட்சிக்கு ஒரு அடியாக முற்றுப்புள்ளி வைப்போம். மோசமான விளம்பர அரசை மக்களே வீடு திருப்புவார்கள். அதிமுகவின் ஜெயலலிதா மாடல் ஆட்சியை மீண்டும் அரியணையில் கொண்டு வருவோம்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
“எமது எழுச்சிப் பயணத்திற்கு மக்களிடமிருந்து கிடைக்கும் பேராதரவு, திரண்டு வரும் மக்கள் வெள்ளம் ஆகியவற்றைப் பார்த்து, முதல்வர் ஸ்டாலின் கலங்கிப்போயிருக்கிறார். எனவே அவர், நான் எம்ஜிஆர், ஜெயலலிதா போல நினைத்துக்கொண்டு பேசுவதாகக் கூறுகிறார். ஆனால் உண்மையில், நான் சாதாரண அதிமுக தொண்டன். மக்களில் ஒருவன். அதிமுகவின் முன்கள வீரன். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை அதிமுக தொண்டர்களுக்கும் எனக்கும் தூக்கம் கிடையாது. அயராது உழைப்போம். 2026 தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி. செல்லும் இடமெல்லாம் எழுச்சியுடன் எழுந்திருக்கும் மக்கள், எமது வெற்றிக்கு சாட்சியாக நிற்கிறார்கள்” என்று பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


