சென்னை: சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு பழைய வீடியோ குறித்து, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் அவர்கள், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் (IPL) போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று மீண்டும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், அமைச்சர் சரத்குமார் மொபைல் போன் திரையின் மீது ஒரு வெள்ளை நிறப் பொடியை ஏடிஎம் கார்டு மூலம் வரிசையாக அடுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தவெக அரசு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த பழைய வீடியோவை திமுகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வந்தனர்.
குழந்தைக்கான மாத்திரை: இந்த அவதூறு பரப்பப்படும் வீடியோ சர்ச்சை குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சரத்குமார் விரிவான விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:
"சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அந்த வீடியோ, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றபோது எடுக்கப்பட்டது. அன்று எனது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், மாத்திரையை முழுமையாக விழுங்க மறுத்துத் துப்பியது.
இதனால், எனது மனைவி கூறியதன் பேரில், அந்தக் குழந்தைக்கு எளிதாகக் கொடுப்பதற்காகவே அந்த மாத்திரையை மொபைல் போன் திரையின் மீது வைத்து கார்டு மூலம் நசுக்கித் தூளாக்கினேன். பின்னர் அதனைத் திரவத்துடன் கலந்து குழந்தைக்கு ஊட்டினோம். இதைக் கூடவா போதைப்பொருள் என்று சொல்வது?" என விளக்கமளித்தார்.
அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறு: மேலும் பேசிய அவர், "நான் மாத்திரையைத் தூளாக்கும் பகுதியை மட்டும் திட்டமிட்டு, தவறான அர்த்தம் கற்பிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் யாரோ பகிர்ந்துள்ளனர். 'Thug Life Moments' என்று விளையாட்டுத்தனமாக அன்று நெருங்கிய நண்பர்களுடன் பகிரப்பட்ட வீடியோவை, இன்று அரசியல் உள்நோக்கத்தோடு போதைப்பொருள் பயன்படுத்துவது போலச் சித்தரித்து வதந்தி பரப்புகிறார்கள்.
சுற்றி நூற்றுக்கணக்கான பொதுமக்களும், அதிகாரிகளும் இருக்கும் ஒரு மைதானத்தில் அமர்ந்துகொண்டு யாராவது போதைப்பொருள் பயன்படுத்த முடியுமா? என் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. இது தொடர்பாக எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று அமைச்சர் சரத்குமார் தெரிவித்தார்.



