அரசியல்

'பார்ட்டி ஃபண்ட்' என்று சொன்னால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள்? - தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி கேள்வி!

top-news

சென்னை: சட்டப்பேரவையில் 'பார்ட்டி ஃபண்ட்' (கட்சி நிதி) என்ற வார்த்தையைக் கேட்டதுமே திமுக உறுப்பினர்கள் ஏன் பதற்றமடைந்து எழுகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த சில நாட்களாகச் சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் திமுகவினரின் விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பதிலளித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

"கடந்த நான்கு நாட்களாகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களைப் பார்த்து திமுகவினர் எள்ளி நகையாடி, விமரிசனம் செய்த போதெல்லாம் அவர்களுக்கு எந்த அரசியல் மரபும் நினைவுக்கு வரவில்லை. நாங்கள் யாருக்கும் அவதூறு பரப்பவில்லை; எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மட்டுமே உரிய முறையில் அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுத்து வருகிறோம்.

எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருப்பார்கள், நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டு கிடக்க வேண்டும் என்ற பண்ணையார்தன அரசியலில் ஈடுபட நாங்கள் தயாராக இல்லை. திமுக பரப்பி வரும் அனைத்துப் போலிப் பிரசாரங்களுக்கும் தவெக அரசு தக்க பதிலடி கொடுக்கும்."

திமுகவினரின் கொந்தளிப்புக்குக் காரணம் என்ன?: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியது குறித்துக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, "முதலமைச்சர் விஜய் அவர்கள் பேரவையில் பேசும்போது பொதுப்படையாக 'பார்ட்டி ஃபண்ட்' என்று மட்டும்தான் குறிப்பிட்டார். அவர் எங்கும் 'திமுக பார்ட்டி ஃபண்ட்' என்று பெயர் குறிப்பிடவில்லை. அப்படியிருக்க, அந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே திமுகவினர் ஏன் பதற்றமடைந்து கொந்தளித்து எழ வேண்டும்?

ஏனெனில், கடந்த ஆட்சிக் காலத்தில் எல்லாத் துறைகளிலும் என்ன நடந்தது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். திமுகவில் உள்ள யாராவது ஒருவராவது 'நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை' என்று தைரியமாகச் சொல்ல முடியுமா?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

விசிக தலைவர் குறித்து கருத்து: தொடர்ந்து பேசிய அவர், "விசிக தலைவர் திருமாவளவன் மீது எங்களுக்கு எப்போதும் அன்பும் மதிப்பும் உள்ளது. அவர் கூறும் நல்ல கருத்துகளை நாங்கள் என்றும் வரவேற்போம். அதே நேரத்தில், கடந்த நான்கு நாட்களாகச் சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு எதிராகவும் திமுகவினர் என்னென்ன அவதூறுகளைப் பேசினார்கள் என்பதை அண்ணன் திருமாவளவன் அவர்கள் உற்று நோக்க வேண்டும்" என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டுக்கொண்டார்.