அரசியல்

பட்ஜெட் தாக்கல்: ஜூலை 2 முதல் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

top-news

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் புதிய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் ஜூலை 2-ஆம் தேதி முதல் துற வாரியாக தீவிர ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால், பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இதன் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. தவெக அரசின் இந்த முதல் முழுமையான பட்ஜெட் வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம்: தேர்தல் சமயத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக:

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்

மாநிலம் முழுவதும் இலவசப் பேருந்து பயணம்

இலவச காஸ் சிலிண்டர் திட்டம்

உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குறுதிகளை நடப்பு பட்ஜெட்டில் எவ்வாறு செயல்படுத்துவது, அதற்கான நிதி ஆதாரங்களை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

20 நாட்கள் நடைபெறும் ஆலோசனை: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கும் இந்த ஆலோசனைக் கூட்டம், ஜூலை 22-ஆம் தேதி வரை சுமார் 20 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் கூட்டங்களில் அந்தந்தத் துறைகளின் அமைச்சர்கள், அரசுச் செயலாளர்கள் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.