சென்னை: இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜூன் 22) மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கியத் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இத்தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசாரமான விவாதங்களும் வார்த்தை மோதல்களும் ஏற்பட்டன.
இன்றைய கூட்டத்தில் எதிர்பார்ப்பு: வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடும் அவையில், ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. குறிப்பாக, இன்று முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு சட்டசபையில் மக்கள் நலன் சார்ந்த சில முக்கிய மற்றும் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.



