சென்னை: அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் அத்துமீறி நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும், அரசியல் தலையீடு இன்றி அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கும் சூழலை முதலமைச்சர் உருவாக்க வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜூன் 20) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொடரும் அத்துமீறல்கள்: திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக (TVK) நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு செய்துள்ளனர். அதேபோல், இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் 'ரீல்ஸ்' (Reels) எடுக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளன. நாளுக்கு நாள் தொடரும் தவெகவினரின் இந்த அத்துமீறலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்?
நடவடிக்கை எடுக்காததன் விளைவு: தவெக ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் 'ஆய்வு' என்ற பெயரில் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் விளைவே, தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல வீடியோ எடுப்பதும், பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்துவதுமான அவலநிலையை உருவாக்கியுள்ளது.
அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தம்: சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு கூடாது. இது அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கும்.
முதலமைச்சருக்கு கோரிக்கை: எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்க வேண்டும். அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



