அரசியல்

"வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின்..." - 'சோபா' விவாதத்திற்கு அமைச்சர் அருண்ராஜ் காரசார பதிலடி

top-news

சென்னை: தமிழகத்தில் வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக அரசு என்றும் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை 'சோபா மாடல் ஆட்சி' என்று விமர்சித்திருந்தார். மேலும், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "4 இருக்கை கொண்ட சோபா தற்போது 5 இருக்கை கொண்ட சோபாவாக உயர்த்தப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, தாத்தாவுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரே ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் 'sonஆதன' (சநாதன) சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே...

அதிகாரத்தைப் பரவலாக்கும், சாமானியர்கள் அனைவரையும் சமமாக அமர வைக்கும் ஜனநாயக சோபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கப் போகிறது?

அங்கு நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோபா இது. சனாதன சிம்மாசனங்களில் அமர்ந்திருப்பவர்களுக்கு, இத்தகைய ஜனநாயக சோபாக்கள் பற்றிப் பேசுவதற்கு எந்தவொரு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!

தமிழ்நாட்டில் கடந்த 04.05.2026 அன்றே வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான, அனைவருக்கும் அதிகாரப் பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோபா மட்டும்தான் இருக்கும்."

"தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒரு மோசமான அரசுக்கு வாக்களித்துவிட்டோமே என்று மக்கள் வருந்துகிறார்கள்; இந்த சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் தவெக அமைச்சர் அருண்ராஜ் அளித்துள்ள இந்தப் பதிலடி தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரவபரப்பைக் கிளப்பியுள்ளது.