சென்னை: மறுமலர்ச்சி திாாவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்யப்போவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் யூகங்களே என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசிய பின், செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ இவ்விளக்கத்தை அளித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
"மதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்யப்போவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ஊடகங்களின் யூகங்களே ஆகும். சில பத்திரிகைகளும், விவாத மேடைகளும் இது குறித்துக் கடுமையாகப் பேசி வருகின்றன. ஊடகங்களின் இத்தகைய யூகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. மனதில் தோன்றுவதையெல்லாம் பேச இயலாது. முதலமைச்சர் விஜய் மிகவும் எளிமையாகவும் இயல்பானவராகவும் இருக்கிறார்."
மேலும், "வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுகவுடன் பயணிப்பீர்களா அல்லது தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைவீர்களா?" என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றி அனைத்துக் கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து அங்குதான் முடிவு எடுக்கப்படும்" என்று வைகோ பதிலளித்தார்.
முன்னதாக, நேற்று மதிமுகவின் வைகோ இல்லத்திற்குச் சென்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று வைகோ முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



