அரசியல்

ஆம்புலன்ஸை மறித்து ரகளை: துறையூரில் அதிமுகவினர் அராஜகம்!

top-news

**திருச்சி, ஆகஸ்ட் 25:** திருச்சி மாவட்டம் துறையூரில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்காக காத்திருந்த அதிமுகவினர் ஆம்புலன்ஸ் ஒன்றைத் தடுத்து நிறுத்தி, அதன் ஓட்டுநரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அந்த ஆம்புலன்ஸ், அதிமுகவினரின் இந்த அராஜகத்தால் சில நிமிடங்கள் சிக்கித் தவித்தது.

துறையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில், அங்குள்ள சாலையோரங்களில் பெருமளவில் அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது ஆத்தூர் சாலையில், ஒரு விபத்தில் காயமடைந்தவரை மீட்டு அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ், கூட்டத்தால் மறிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஹாரன் அடித்தும் வழிவிடாத கூட்டத்தில் இருந்த சிலர், ஆம்புலன்ஸின் கதவைத் திறந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநரைத் தாக்க சிலர் பாய்ந்ததால் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து ஆம்புலன்ஸ் செல்ல வழிவகுத்தனர். இதனால், காயமடைந்தவர் உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், ஆம்புலன்ஸை மறித்து ரகளையில் ஈடுபட்ட அதிமுகவினரின் செயல், பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

### வேலூரில் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மிரட்டல்: இது இரண்டாவது சம்பவம்!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது. அப்போது, பரப்புரையின்போது அவ்வழியாக வந்த ஒரு ஆம்புலன்ஸை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி, அதில் நோயாளி இல்லை எனக் கூறி, ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேந்தரை நேரடியாகவே மிரட்டினார். "அடுத்த முறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்கு இடையூறாக வந்தால், ஆம்புலன்ஸை ஓட்டி செல்பவர் அதில் பேஷண்டாக செல்வார்" என அவர் பேசியது பெரும் சர்ச்சையானது.

பின்னர், போலீஸ் விசாரணையில், அந்த ஆம்புலன்ஸ் ஒரு நோயாளியை அணைக்கட்டு மருத்துவமனையிலிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேந்தர் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

வேலூரில் நடந்த சம்பவம் இன்னும் மனதிலிருந்து மறையாத நிலையில், மீண்டும் திருச்சி துறையூரில் நடந்த இந்த ஆம்புலன்ஸ் மறிப்புச் சம்பவம், அஇஅதிமுக தொண்டர்களின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும், மக்களின் உயிர் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளாத செயல் என்றும் அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்.