சேலம்: சேலம் அருகே செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளர் பெங்களூரூ புகழேந்தி, தமிழக அரசியல் சூழ்நிலையையும், அதிமுக-பாஜ உறவையும் சுட்டிக்காட்டி பல்வேறு கடுமையான கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலைக்கு, ஆரம்பத்தில் கட்சியினர் மத்தியில் நல்ல மரியாதை இருந்தது. ஆனால் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பற்றி அவர் தாக்கி பேசிய பிறகு, அந்த மரியாதை அனைத்தும் கலைந்து போய்விட்டது. பழனிசாமியைப் பற்றி ‘காலில் விழுந்து பதவி பிடித்தவர், பச்சை மையில் 10 ஆண்டுகள் கையெழுத்திட்டவர்’ என்று கூறிய அண்ணாமலை, பின்னர் திரும்பிப் பழனிசாமியைப் புகழ்ந்து பேசுவது மிகவும் கீழ்தரமான அரசியல் நடைமுறை. ஒரே விஷயத்தில் ஒரே நிமிடத்தில் இரண்டு வித்தியாசமான பேச்சுகள் ஏன்? என்கிற கேள்வி எழுகிறது,” என்றார்.
மேலும் அவர் தொடர்ந்து,
“அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட காரணம் பழனிசாமி தான். இன்று அவரை புகழ்ந்து பேசினால் மீண்டும் பதவி கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால் பழனிசாமி வாழும் வரை அது சாத்தியமே இல்லை. வடக்கிலிருந்து ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜ ஆட்சியை நிலைநாட்ட முடியாது.
எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜயுடன் கைகோர்க்க முயன்றார். ஆனால் அது நடக்காமல் போனது. அடுத்த தேர்தலில் அதிமுகக்கு நான்காவது இடமே கிடைக்கும். அந்த இடத்திற்குக் கூட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும், பழனிசாமியின் அதிமுகவும் கடும் போட்டி போடுவார்கள்.
இன்று பழனிசாமி மனிதநேயம் இன்றி அரசியல் நடத்துகிறார். ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய சம்பவம், மூத்த தலைவர் தம்பிதுரையை தாக்கிய நிகழ்வு, தெர்மாகோல் செல்லூர் ராஜூவை வண்டியில் ஏற விடாமல் தடுத்த சம்பவம் போன்றவை எல்லாம் அவரின் தனிநபர் அரசியல் பாணியை வெளிப்படுத்துகிறது.
எடப்பாடியுடன் இருக்கும் அதிமுகவினர் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். அவருடன் இருப்பவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் எப்போது யாரை அடிப்பார் என்று சொல்ல முடியாது. அனைவரையும் தாக்கும் அரசியல்வாதியாகவே அவர் மாறிவிட்டார்,” என்று புகழேந்தி சாடினார்.
இவ்வாறு புகழேந்தி கூர்மையான விமர்சனங்களுடன் பழனிசாமியை குறிவைத்து பேசியது, சேலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


