திருநெல்வேலி: தமிழக அரசு அலுவலகங்களில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படங்களை வைப்பது தொடர்பாகப் பல்வேறு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தொடர் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அந்த வகையில், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்திற்கு கீழே அமர்ந்து பணியாற்ற மறுத்து, மேயர் ஜி. ராமகிருஷ்ணன் தனது இருக்கையை மாற்றியமைத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில் முதலமைச்சரின் புகைப்படம் தனியாக ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சமீபத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் பிரதிநிதியான முதலமைச்சரின் புகைப்படத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும், அதனை மேயர் நாற்காலிக்கு நேர் பின்னால், சுவற்றின் மையப்பகுதியில் மாட்ட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மு.கருணாநிதி ஆகியோரின் படங்களின் நடுவே தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வப் புகைப்படம் மாட்டி வைக்கப்பட்டது. இருக்கையை மாற்றிய மேயர்வழக்கமாக மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட முதன்மை நாற்காலியில் அமர்ந்துதான் கோப்புகளையும், மக்கள் பணிகளையும் கவனிப்பது மரபாகும். ஆனால், த.வெ.க.வினரின் கட்டாயத்தினால் முதலமைச்சர் விஜயின் படம் தனது நாற்காலிக்கு மேல் வைக்கப்பட்டதால், மேயர் ராமகிருஷ்ணன் அந்த முக்கிய இருக்கையில் அமர்வதைத் தவிர்த்துள்ளார். அவர் தனது அறையின் மற்றொரு பகுதிக்கு மாறி, அங்குள்ள சோஃபாவில் அமர்ந்து பணிகளைச் செய்யத் தொடங்கினார். மேலும், தனது அதிகாரப்பூர்வ மேஜை மற்றும் நாற்காலியை நகர்த்தி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் புகைப்படத்திற்கு கீழே தனியாக ஒரு இடத்தை அமைத்து அங்கிருந்து கோப்புகளைக் கவனித்து வருகிறார்.
மேயரைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் இருக்கைகளும் அதற்கு தகுந்தாற்போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. "என்னை உருவாக்கியது திமுக தலைவர்" - மேயர் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "அரசியல் ரீதியாகவும், மக்கள் பணியிலும் என்னை உருவாக்கியது எனது கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் தான். எனக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்திற்கு கீழே அமர்ந்து பணிபுரிவதுதான் மனரீதியாகப் பிடித்திருக்கிறது. த.வெ.க.வினர் அரசியல் ஆதாயத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி, மக்கள் பணிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். நான் இருக்கையை மாற்றியதால் எனது மக்கள் பணி எந்த வகையிலும் பாதிக்கப்படாது" என்று அவர் விளக்கமளித்துள்ளார். தீவிரமடையும் மோதல் இதேபோன்ற புகைப்பட சர்ச்சைகள் கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாநகராட்சிகளிலும் வெடித்துள்ளன.
கோயம்புத்தூர் மேயர் ரங்கநாயகி தனது தனிப்பட்ட அறையில் முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்க மறுத்து, அதற்குப் பதிலாக அறையின் வெளிப்பகுதியில் வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், த.வெ.க.வினருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அரசு அலுவலகங்களில் நிலவி வரும் இந்த "புகைப்படப் போர்", புதிய அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளன.


