அரசியல்

ஆட்சியமைத்து ஒரு மாதம் நிறைவு: முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடு எப்படி? — ஒரு அரசியல் அலசல்

top-news

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையில் தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்து நாளை (ஜூன் 10) ஒரு மாதம் நிறைவடைகிறது. 

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலின் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகி, தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தின. திராவிடக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி த.வெ.க. அதிக இடங்களைக் கைப்பற்றிய போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மே 10 அன்று முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார்.  

கடந்த ஒரு மாத காலத்தில் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறன், எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் மற்றும் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த தேதி வாரியான அலசல் பின்வருமாறு:

பதவியேற்பும் முதல் நாள் அதிரடிகளும் (மே 10): சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற அன்றே மக்கள் செல்வாக்கைப் பெறும் வகையிலான 3 முக்கியக் கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்:  இலவச மின்சாரம்: வீட்டு உபயோக மின்நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்க உத்தரவு.  பெண்கள் பாதுகாப்பு: மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'சிங்கப் பெண்' சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம்.  

போதைப்பொருள் ஒழிப்பு: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க 65 போதைப்பொருட்கள் தடுப்பு படைகள் அமைத்தல்.  

பொருளாதார வெள்ளை அறிக்கை அறிவிப்பு: முந்தைய ஆட்சிக்காலக் கடன்களைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், "தமிழக அரசின் கஜானா துடைக்கப்பட்டிருக்கிறது; சுமார் ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. எனவே நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" என்று அதிரடியாக அறிவித்தார்.  

டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்புமே 11 & 12: கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளைக் கண்டறிந்து மூட உத்தரவிடப்பட்டது. மொத்தம் கண்டறியப்பட்ட 717 கடைகளில், முதற்கட்டமாக முதல் நாளிலேயே 50 கடைகள் உடனடியாக மூடப்பட்டன.  

மே 13: தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு 144 வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. வெளிநடப்பு செய்த நிலையில், "மக்கள் நலனே முக்கியம்; முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும்" என்று விஜய் உறுதியளித்தார். 

 அரசு ஊழியர்கள் நலன் மற்றும் மத்திய அரசுடனான உறவு: மே 14 அன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகவிலைப்படியை (DA) 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக (2% உயர்வு) உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டார். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைந்தனர்.  அதே நாளில், நலிவடைந்துள்ள ஜவுளித் தொழிலைக் காக்க பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வக் கடிதத்தை அவர் எழுதினார்.  

தொழில் முதலீடுகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்: மே 15 தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், BMW குழும மேலாண்மை இயக்குநர் தாமஸ் டோஸ், யமஹா மோட்டார்ஸ் தலைவர் ஜிம் ஆட்டா மற்றும் டாபே நிறுவனத் தலைவர் மல்லிகா சீனிவாசன் உள்ளிட்ட முன்னணித் தொழில் அதிபர்களுடன் முதலமைச்சர் விஜய் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.  மே 18: நிர்வாகத்தை வலுப்படுத்தும் பொருட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 'அம்மா உணவகங்களை' சீரமைத்து, தரமான உணவுகளைத் தொடர்ந்து வழங்க உத்தரவிட்டார். மேலும், தனது செயலக அதிகாரிகளான செந்தில்குமார் (செயலாளர் 1), லட்சுமி பிரியா (செயலாளர் 2), அண்ணாதுரை (செயலாளர் 3) மற்றும் விஷ்ணு (கூடுதல் செயலாளர்) ஆகியோருக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்து நிர்வாகத்தை முடுக்கிவிட்டார்.  

அமைச்சரவை விரிவாக்கம்: ஆரம்பத்தில் 9 அமைச்சர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அரசு, மே 21 அன்று 23 அமைச்சர்களையும், மே 22 அன்று மேலும் 2 அமைச்சர்களையும் உள்ளடக்கி, 3 கட்டங்களாக முழுமையான அமைச்சரவை விரிவாக்கத்தைச் செய்து முடித்தது. அனைத்து அமைச்சர்களுக்கும் துறைகள் பிரிக்கப்பட்டு, தற்போது பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்கு மத்தியில், புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் ஒரு மாத செயல்பாடு, அதிரடியான மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களால் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தின்படி மத்திய அரசுடன் இணக்கமான மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் போக்கைக் கையாள்வதுடன், உள்நாட்டு நிர்வாகத்திலும் வேகம் காட்டி வருகிறார்.  எனினும், நிலுவையில் உள்ள ரூ.10 லட்சம் கோடி கடனைச் சமாளித்து, அறிவித்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதே இந்த அரசின் அடுத்தகட்ட சவாலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.