அரசியல்

“தமிழக பாஜக தலைமைக்கு கடும் போட்டி?”

top-news

தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பாஜக தமிழக அலகிற்குள் புதிய அதிகாரப் போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.


முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, "இது நம்ம இயக்கம்" என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள நிலையில், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பொறுப்பில் இருந்து விலகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், தமிழக பாஜக தலைமைப் பதவியை கைப்பற்றுவதற்கான போட்டி கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள், தேசிய தலைமையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லியில் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலையின் வெளியேற்றத்திற்குப் பிறகு கட்சியின் அடுத்தகட்ட பாதை, 2029 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2031 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கிய வியூகங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய தலைமை தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக அமைப்பை மீண்டும் வலுப்படுத்தக்கூடிய முகம் யார் என்ற கேள்வி தேசிய தலைமையிடம் முக்கிய விவாதமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல்வேறு தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், நயினார் நாகேந்திரன் பதவி விலகுவது அல்லது புதிய தலைவர் நியமனம் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன.