அரசியல்

உதயநிதி ஒருபோதும் முதல்வராக முடியாது.. அமித்ஷா ஆவேசம் !

top-news

திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்டாலின் தன் மகன் உதயநிதியை முதல்வராக்கவும் கனவு காண்கிறார்கள் என்றும், அந்தக் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறியுள்ளார்.
 
 திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார்.
 
 **திமுக மீது அமித் ஷா கடும் தாக்குதல்**
 
 தனது உரையில், தமிழகத்தின் சரித்திரம், வீரம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை புகழ்ந்த அமித் ஷா, நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றிய இல.கணேசனின் ஆன்மா இளைப்பாற பிரார்த்திப்பதாகக் கூறினார். அத்துடன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணனை முன்னிறுத்தி பெருமையடையச் செய்த பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
 
 அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய மசோதா குறித்து பேசிய அவர், பிரதமர் அல்லது முதல்வர் சிறை சென்றால் 30 நாட்களுக்குப் பிறகு அவர்களது பதவி பறிபோகும் என்று குறிப்பிட்டார். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாகவும், தமிழகத்தில் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் சிறையில் இருந்ததைச் சுட்டிக்காட்டி, சிறையில் இருந்தவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
 
 மேலும், இந்த புதிய மசோதாவை கருப்புச் சட்டம் என்று விமர்சித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதற்கு உரிமை இல்லை என்று அமித் ஷா தெரிவித்தார். தமிழகத்தில் டாஸ்மாக், எல்காட், போக்குவரத்து மற்றும் இலவச வேட்டி-சேலைகள் போன்ற பல திட்டங்களில் ஊழல் நடப்பதாகவும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று இந்த ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அவர் கூறினார்.
 
 **திமுக, காங்கிரஸ் வாரிசு அரசியல்**
 
 திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் வாரிசுகளை அரியணையில் அமர்த்தத் துடிப்பதாக அமித் ஷா குற்றம் சாட்டினார். சோனியா காந்தி தன் மகன் ராகுலை பிரதமராக்கவும், ஸ்டாலின் தன் மகன் உதயநிதியை முதல்வராக்கவும் கனவு காண்கிறார்கள் என்றும், அந்தக் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் திமுக கூட்டணியை நிச்சயம் தோற்கடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
 மேலும், கடந்த தேர்தலில் பாஜக 18 சதவீத வாக்குகளையும், அதிமுக 21 சதவீத வாக்குகளையும் பெற்றதாகவும், இந்த இரண்டும் சேர்ந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல, அது தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் கூட்டணி என்றும் அமித் ஷா கூறினார்.
 
 **கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்**
 
 இதே மாநாட்டில், திமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது பேசிய அவர், தான் நன்றி கெட்டவர்கள் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்று கூறி, திமுகவில் இருந்து விலகவில்லை என்றும், நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், தனது உழைப்பை திமுக வரலாறு சொல்லும் என்றும் அவர் கூறினார்.
 
 தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே தான் வழக்கு தொடுத்து தீர்வு கண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் உள்ள 19 நதிநீர் பிரச்சினைகளுக்கு மத்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.