கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ எஸ்பி வேலுமணி இந்த விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள்தானா என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். அவசரமாக வழக்கை முடிக்க முயற்சிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
மேலும், சிறுமி உயிரிழந்த சம்பவம் மாநில மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய வேலுமணி, “சம்பவத்தின் முழு உண்மையும் வெளிவர வேண்டும். குற்றவாளிகள் யார் என்றாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிறுமி மரணம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


