அரசியல்

விஜய்யின் பேச்சு தரம் தாழ்ந்தது - அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

top-news

**திருச்சி:** தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மதுரை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசியது தரம் தாழ்ந்தது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்தார். அண்மையில் அரசியலில் நுழைந்த ஒருவர், 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மாநில முதல்வரையும், மிகப்பெரிய கட்சியின் தலைவரையும் இவ்வாறு விமர்சிப்பது தவறு என்றும் அவர் சாடினார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "நேற்று மதுரை மாநாட்டில் விஜய் பேசியது தரம் தாழ்ந்த செயல். 50 பேர் கூட்டத்தில் கூடிவிட்டனர் என்பதற்காக இவ்வாறு பேசுவது முறையல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வரை, மிகப்பெரிய கட்சியின் தலைவரை விமர்சிக்கும் தகுதி விஜய்க்கு இல்லை. அவரது தராதரம் அவ்வளவுதான் என்பதை இது காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும், "எதிர்வரும் தேர்தலில் மக்கள் விஜய்க்கு சரியான பாடம் புகட்டுவார்கள். திமுகவும் அவருக்கு பதிலடி கொடுக்கும். தேர்தலில் மக்கள் நல்ல பதிலைத் தருவார்கள். விஜய் பேசியது முற்றிலும் தவறானது" என்று அமைச்சர் நேரு கடுமையாக விமர்சித்தார்.