கன்னியாகுமரி: 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆதிக்கம் செலுத்திய தமிழக வெற்றிக் கழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற முடியாமல் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இருப்பினும், பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து மற்ற கட்சிகளுக்குக் கடும் சவாலை அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. தவெக பல இடங்களில் பாஜகவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி கவனம் ஈர்த்துள்ளது.
நாகர்கோவில்: திமுக வேட்பாளர் என். சுரேஷ் ராஜன் வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் 62,310 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இங்கு பாஜகவின் எம்.ஆர். காந்தி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
கிள்ளியூர்: காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சபின் 65,123 வாக்குகள் பெற்று கடும் போட்டி அளித்தார்.
விளவங்கோடு: காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பிரவீன் 20,970 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் மைக்கேல் குமார் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
குளச்சல்: காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற, தவெக வேட்பாளர் பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
பத்மநாபபுரம்: சிபிஎம் வேட்பாளர் செல்லசாமி வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் கிருஷ்ணகுமார் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
கன்னியாகுமரி: அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 214 வாக்குகள் வித்தியாசத்தில் மிகக் குறைந்த இடைவெளியில் வெற்றி பெற்றார். இங்கு தவெக வேட்பாளர் மாதவன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பாரம்பரியமாகத் திராவிடக் கட்சிகளுக்கும், பாஜக/காங்கிரஸ் கட்சிகளுக்கும் கோட்டையாக இருந்து வரும் நிலையில், அறிமுகத் தேர்தலிலேயே தவெக ஐந்து தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது அரசியல் நோக்கர்களை வியக்க வைத்துள்ளது. வெற்றி வாய்ப்பை இழந்தாலும், கணிசமான வாக்குகளைப் பிரித்து மாவட்டத்தின் முக்கிய அரசியல் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மாவட்டங்களில் பல இடங்களில் வெற்றி வாகை சூடிய தவெக-விற்கு, கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சவாலான களமாகவே அமைந்துள்ளது. வரும் காலங்களில் இங்குத் தனது அடித்தளத்தை வலுப்படுத்த அக்கட்சி கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


