அரசியல்

புதுச்சேரி தேர்தல் களம்: இலவச கல்வி முதல் ‘வந்தே மெட்ரோ’ வரை - காங்கிரஸ், பா.ஜ.க.வின் அதிரடி வாக்குறுதிகள்!

top-news

புதுச்சேரி: 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு துருவங்களும் இலவசங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மையப்படுத்திப் போட்டிப் போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

இலவசக் கல்வி: 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்வி (PhD) வரை மாணவர்களுக்கு முற்றிலும் இலவசக் கல்வி வழங்கப்படும்.

மளிகைப் பொருட்கள்: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் மாதம் ரூ. 2,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

மாநில அந்தஸ்து: 2029-ல் ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் புதுச்சேரிக்கு நீண்ட கால கோரிக்கையான மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்.

பெண்கள் நலன்: பெண்களுக்குத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 'தாலிக்கு தங்கம்' வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பா.ஜ.க.: இலவச சிலிண்டர் முதல் இ-ஸ்கூட்டர் வரை
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:

இலவச எரிவாயு: பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளை முன்னிட்டு ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

மாணவியருக்கு பரிசு: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாகச் செயல்படும் மாணவிகளுக்கு 'அன்பு தங்கை திட்டம்' மூலம் இலவச இ-ஸ்கூட்டர் வழங்கப்படும்.

பிங்க் ஆட்டோ திட்டம்: பெண்களுக்கு இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுவதோடு, புதிய ஆட்டோ வாங்க ரூ. 50,000 மானியம் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு: அரசுப் பணிகளில் (Group C & D) உள்ளூர் மக்களுக்கு 60% இடஒதுக்கீடு மற்றும் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி (Internship) வழங்கப்படும்.

போக்குவரத்து மாற்றம்: சென்னை - புதுச்சேரி இடையே வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படும். புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு 'மகாகவி பாரதியார்' பெயர் சூட்டப்படும்.

மலிவு விலை உணவகம்: புதுச்சேரி முழுவதும் 30 இடங்களில் 'அடல் உணவகங்கள்' அமைக்கப்படும்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 9,000 நிதி உதவி மற்றும் மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணத்தை ரூ. 12,000 ஆக உயர்த்துவதாக பா.ஜ.க. உறுதியளித்துள்ளது. மறுபுறம், கல்வி மற்றும் அடிப்படை வாழ்வாதாரத்தை மையமாக வைத்து காங்கிரஸ் களம் கண்டுள்ளது.