சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சசிகலா மற்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரின் சந்திப்பு மற்றும் அவர்கள் அமைக்கவுள்ள புதிய கூட்டணி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கூட்டணியால் பாதிப்பா? சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "யார் வேண்டுமானாலும் யாருடனும் கூட்டணி அமைக்கலாம். ஜனநாய நாட்டில் அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்களது கூட்டணியால் அமமுக-விற்கோ அல்லது எங்கள் தரப்பிற்கோ எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது," என்று திட்டவட்டமாகக் கூறினார்.
தேர்தல் நேரங்களில் இதுபோன்ற பல புதிய கூட்டணிகள் உருவாவது இயல்புதான் என்றும், இது மக்களின் செல்வாக்கை எந்தளவிற்குப் பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் கட்சி மக்களின் நலனை முன்னிறுத்தித் தனித்துவமாக இயங்கி வருவதாகவும், வரும் 2026 தேர்தலில் வலுவான முன்னெடுப்புகளை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபகாலமாக சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், அதன் ஒரு பகுதியாகப் பா.ம.க போன்ற கட்சிகளுடன் இணைந்து ஒரு புதிய முகாமை உருவாக்க முயற்சிப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இதனிடையே, சசிகலாவுடன் அரசியல் ரீதியாக விலகி இருக்கும் டி.டி.வி. தினகரனிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு அவர் மிக நிதானமாகவும் அதேசமயம் சவாலாகவும் பதிலளித்துள்ளார்.


