கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏற்கனவே கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டு, விஜய்க்கு இது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் பணிகள் காரணமாகத் தமிழகத்திலேயே விசாரணை நடத்த விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சிபிஐ அதிகாரிகள் விடுத்த கண்டிப்பான உத்தரவின் பேரில் நேற்று தனி விமானம் மூலம் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட 7 நிர்வாகிகளுடன் அவர் டெல்லி சென்றடைந்தார். இன்று காலை 10:30 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம், முந்தைய விசாரணைகளின் போது கோரப்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விபத்துக்கான காரணங்கள் குறித்து சுமார் 7 மணி நேரம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
மாலை 5:30 மணி வரை நீடித்த இந்த விசாரணையைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்குத் திரும்பிய நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


