அரசியல்

விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த திருமாவளவனின் எச்சரிக்கை: திமுக கூட்டணி நிலவரம் குறித்து விளக்கம்

top-news

சென்னை சைதாப்பேட்டையில் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பாஜகவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றும், அது அவருக்குச் சூனியமாக முடிந்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் குறித்துப் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த அவர், மற்ற கூட்டணிகள் இன்னும் ஆலோசனையிலேயே இருக்கும் நிலையில், திமுக கூட்டணி முன்கூட்டியே பணிகளைத் தொடங்கிவிட்டதைச் சுட்டிக்காட்டினார்.