அரசியல்

பிரச்சார கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. சீறிய எடப்பாடியார் !

top-news

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிரச்சார கூட்டத்தில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

### பிரச்சார கூட்டத்தில் இடையூறு

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, எடப்பாடி கே. பழனிசாமி அணைக்கட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் வாகனம் கூட்ட அரங்கில் நின்றவுடன், அருகிலுள்ள குறுக்குத் தெருவிலிருந்து திடீரென 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.

அதில் நோயாளி இல்லையென அதிமுக தொண்டர்கள் சுட்டிக்காட்டினர். இதனால், கூட்டத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.

### எடப்பாடியின் எச்சரிக்கை

இதுகுறித்து மேடையில் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி,
“என் கூட்டம் எங்க நடந்தாலும், நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வண்டிகளை அனுப்பி மக்களை சிரமப்படுத்தும் வேலை இந்த துப்பில்லாத அரசு செய்து கொண்டிருக்கிறது. 30க்கும் மேற்பட்ட கூட்டங்களில் இதையே பார்த்திருக்கிறேன். நேருக்கு நேர் எதிர்க்க தைரியம் இல்லாததால், இப்படிப்பட்ட கேவலமான செயலில் ஈடுபடுகிறார்கள்.

இந்த ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநரின் பெயரைப் பதிவு செய்து காவல்நிலையத்தில் புகார் அளியுங்கள். அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வந்தால், அதன் ஓட்டுநரே நோயாளியாகி அதில் ஏற்றப்படுவார்” என்று எச்சரித்தார்.

மேலும் அவர், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கான இழப்பீடு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, உயர்கல்வி சாதனை உள்ளிட்ட அதிமுக ஆட்சியின் பல்வேறு சாதனைகளை விரிவாக விளக்கினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் வேலூர் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் கூறியதாவது: அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் வயிறு கோளாறு பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டிருந்த ஓங்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (60) என்பவரை, மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரைத்தனர். இதற்காக இரவு 9.45 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதன்படி, பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் காத்திருந்த ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டுநர் சுரேந்தர் வாகனத்தை கொண்டு இரவு 10.20 மணியளவில் அணைக்கட்டு வழியாக வந்தபோது, அதிமுக பிரச்சார கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸை பக்கத்து தெருவழியாக செல்லுமாறு வழிகாட்டினர். அந்த வழியாக செல்லும்போது கூட்ட மேடையை ஒட்டியே வாகனம் சென்றதால் குழப்பம் ஏற்பட்டது. ஓட்டுநர் மீது தாக்குதல் நிலை உருவானது. பின்னோக்கிச் செல்ல முடியாத சூழ்நிலையில், அவர் சுமார் 40 நிமிடங்கள் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் காத்திருந்தார்.

பின்னர் நோயாளி சந்திராவை அழைத்துச் சென்று, இரவு 12.30 மணிக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்ததாகவும், ஆம்புலன்ஸ் சேவையில் குற்றம் இல்லை என்றும் 108 நிர்வாகம் தெரிவித்துள்ளது.

### அரசியல் சூழல் சூடுபிடிப்பு

இந்த சம்பவத்தால், அதிமுக–திமுக இடையே புதிய அரசியல் விவாதம் எழுந்துள்ளது. எடப்பாடி கே. பழனிசாமி, ஆம்புலன்ஸ் சம்பவத்தை “அரசின் சூழ்ச்சி” என்று குற்றம் சாட்ட, 108 நிர்வாகம் அதனை “சாதாரண மருத்துவ அவசர நிலை” என விளக்கம் அளித்துள்ளது.

அணைக்கட்டு தொகுதியில் நடந்த இந்தச் சம்பவம், அடுத்த கட்ட பிரச்சாரங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.