அரசியல்

தமிழக தேர்தல் 2026: திமுக - காங்கிரஸ் இடையே இன்று முக்கிய தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை!

top-news

சென்னை: வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே இன்று அதிகாரப்பூர்வமான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் மேலிடத் தலைவர்களும் சந்தித்து வந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் காங்கிரஸ் குழுவினர் விரிவான ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

காங்கிரஸின் எதிர்பார்ப்பு: கடந்த 2021 தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை கூடுதல் இடங்களைக் கோரி வருகிறது. குறிப்பாக 35 முதல் 41 இடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திமுகவின் நிலைப்பாடு: கூட்டணியில் புதிய கட்சிகள் (மநீம, தேமுதிக போன்றவை) இணைய வாய்ப்புள்ளதால், கூட்டணிக் கட்சிகள் தங்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 25 முதல் 28 இடங்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க திமுக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் திமுக குழுவினருடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளனர்.

"இந்த முறை தொகுதிப் பங்கீடு மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் அதிகாரம் மற்றும் ராஜ்யசபா சீட் போன்ற கோரிக்கைகளையும் காங்கிரஸ் முன்வைத்துள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் ஒரு சுமுகமான முடிவு எட்டப்படும்" என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.