அரசியல்

மதுரை என்றாலே வீரம், பாசம், கோயில், சாப்பாடு... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்..!

top-news

மதுரையில் நடைபெற்ற பல்வேறு அரசு நலத்திட்ட தொடக்க விழாக்களில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதுரை மண்ணின் சிறப்புகளையும் அதன் தனித்துவமான அடையாளங்களையும் நினைவுகூர்ந்து பெருமிதத்துடன் உரையாற்றினார். 


மதுரை என்றாலே வீரம், பாசம், கோயில் மற்றும் சுவையான சாப்பாடு ஆகிய நான்கு முக்கிய அம்சங்கள் தான் அனைவரது நினைவிற்கும் வரும் என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தூங்காநகரத்தின் வளர்ச்சிக்குத் தமிழக அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். விழாவின் ஒரு பகுதியாக, தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை ₹213.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர், அதன் வழியாகப் பயணம் செய்து புதிய கட்டுமானத்தைப் பார்வையிட்டார். மேலும், சிவங்கங்கையில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் திருவுருவச் சிலையையும், திருமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மேம்பாலத்தையும் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்துப் புகழாரம் சூட்டினார். 

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ. வேலு உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், தென் தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மதுரையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதே அரசின் இலக்கு என முதலமைச்சர் உறுதியளித்தார்.