அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதில், “தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். பொதுமக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக அதிமுக ஆட்சியில் ரூ.14,400 கோடியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது உள்ள திமுக அரசு அதை செயல்படுத்தாமல் முடக்கிவிட்டது. அதேபோல், ரூ.574 கோடியில் கொண்டு வரப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட கூட்டு குடிநீர் திட்டமும் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
திமுக அரசு 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவதாகவும், காஸ் சிலிண்டர் மானியம், கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் பழனிசாமி விமர்சித்தார்.
கந்தர்வக்கோட்டையில் முந்திரிக் கொட்டைகளை உடைப்பதற்கான நவீன கருவிகள் அரசு மானியத்தில் வழங்கப்படும் என்றும், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் ஏற்பட்ட மாசுபாடு தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“அதிமுக – பாஜக கூட்டணிக்குப் பயந்துதான் ஸ்டாலின் மதவாத கூட்டணி என விமர்சிக்கிறார். 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்றும் பழனிசாமி கூறினார்.
இதையடுத்து, ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.


