அரசியல்

பாஜகவில் இணைந்தது ஏன் ? நடிகை கஸ்தூரி விளக்கம்

top-news

பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நடிகை கஸ்தூரி, சமூகப் பிரச்சினைகளிலும் தன்னுடைய குரலை வெளிப்படுத்தியவர். சமூகச் செயல்பாட்டாளராக அறியப்பட்ட அவர், அண்மையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் நேற்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

கட்சியில் இணைந்த பிறகு அளித்த பேட்டியில் கஸ்தூரி, “தமிழகத்தில் பேச்சுச் சுதந்திரம் இல்லை. பெண்கள் சுதந்திரம் இல்லை. சுதந்திரமாக உயிர் வாழும் சூழ்நிலையே இல்லை. சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் எனக்குள் பெரும் கோபத்தை ஏற்படுத்தின. ஒவ்வொரு முறை அநீதி, அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்த போதும், ஆளுக்கட்சி தரப்பிலிருந்தே எதிர்ப்பு வந்தது. நான் சங்கி, பாஜகவின் ஊதுகுழல், அண்ணாமலையின் ஆள் என்று விமர்சிக்கப்பட்டேன். உண்மையில் நடுநிலையாகக் குரல் கொடுத்தாலும், அதை திமுகவின் எதிர்ப்பு பாஜகதான் என்று சித்தரித்து விட்டார்கள். அதனால், தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்து, சுதந்திரமாக மக்கள் பணி செய்ய விரும்புவதாகக் கூறினேன். அதற்கு அவர், ‘நாங்களும் அதையே பல காலமாகக் கேட்டு வருகிறோம்’ என்று கூறினார். ஒரே கோட்டில் சிந்தனை நடந்ததால் பாஜகவில் இணைய முடிவு செய்தேன்” என்றார்.

மேலும், “முதலில் நான் அரசியலுக்குள் வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தேன். பெண்கள் உரிமை, சட்ட உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் சமூகச் செயல்பாட்டாளர்களை அரசியல் பார்வையுடன்தான் பார்க்கிறார்கள். அதனால் அப்படி ஒரு பெயர் கிடைக்கும் போது, அதையே நேரடியாக சுமந்து செல்லலாம் என்று எண்ணினேன். பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள ‘ஆபரேஷன் சிந்தூரு’ போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, அவருக்காக ஓர் அணிலாவது ஆக வேண்டும் என்ற எண்ணமே என்னை பாஜகவுக்குள் கொண்டுவந்தது” என கஸ்தூரி வலியுறுத்தினார்.

இதன்மூலம், நடிகை கஸ்தூரி தனது சமூகப் போராட்ட குரலை அரசியல் தளத்திலும் தொடர முடிவு செய்திருப்பது தெளிவாகிறது.