மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி பாரபத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கான அனுமதி பெற காவல்துறை முன்வைத்த 42 கேள்விகளுக்கும், தவெக நிர்வாகம் தேவையான விளக்கங்களை கடந்த வாரமே வழங்கியது.
அதன்பின், நேற்று (ஆகஸ்ட் 11) தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், திருமங்கலம் ஏஎஸ்பி அன்சுல் நாகர் மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்பையாவை நேரில் சந்தித்து, மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் அனுமதி விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “பார்க்கிங், போக்குவரத்து வசதிகள், பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக தேவையான விளக்கங்களை ஏற்கனவே அளித்துள்ளோம். இதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறை மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மாநாட்டு பணிகள் சுமார் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும்,” என்றார்.
மாநாட்டிற்கான மேடை, இருக்கை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், தங்கும் இடங்கள் உள்ளிட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் மாநாட்டில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.


